திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை போதைப் பொருட்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது, மற்றும் அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதே காவல்துறையின் முக்கிய நோக்கமாகும். போதைப்பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினர் இடையே சிந்திக்கும் திறன்களை குறைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட வைக்கும். எனவே போதைப்பொருள் சம்பந்தமான குற்றம் பற்றிய தகவல்களை இரகசிய வழியில் தெரிவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட DRUG FREE TN என்ற செயலி தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தச் செயலியின் மூலம் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களான கஞ்சா, புகையிலை, குட்கா, பான்மசாலா மற்றும் கள்ளச்சாராயம் போன்றவை தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது பதுக்கி வைக்கப்பட்டாலோ DRUG FREE TN என்ற செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இந்த செயலியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், மேற்கண்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும். தகவல் தெரிவிப்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற எந்த விபரமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இந்த தகவல் தெரிவிப்பவரின் எந்த ஒரு விபரமும், இந்த செயலி மூலம் காவல் துறையினருக்கோ அல்லது பிறருக்கோ தெரியவர வாய்ப்பில்லை. எனவே இது போன்ற போதைப்பொருள் சம்பந்தமான குற்றம் நடைபெற்றால் DRUG FREE TN அலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து, மேற்படி குற்றம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்யுமாறு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்