தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (09.08.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், காவல்துறையின் மூலம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். பள்ளிப்படிப்பை தொடரும்போது பல்வேறு இடர்கள் வரும், அவற்றை நீக்கி நம் எதிர்காலத்தை நோக்கி பயணித்து இலக்கை அடைவதையே குறிக்கோளாக வைக்க வேண்டும்.
மேலும் விவேகானந்தர் அவர்கள் கூறியதுபோல் நாம் என்னவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படியே ஆகிறோம் என்பதை மனதில் வைத்து எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். இங்கு உங்கள் முன் மேடையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் முன்னேறி வந்தவர்கள்தான், அதே போன்று நீங்களும் தேவையில்லாத எண்ணங்களையும், பழக்கங்களையும் தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் வெற்றியாளராக முடியும். உங்கள் முன்னேற்றத்திற்கு பணம், உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எதுவும் தடையல்ல. அப்துல்கலாம் போன்ற மிகப்பெரிய மனிதர்கள் மிகவும் சாதாரண குடும்ப சூழ்நிலையில் இருந்து சாதித்து வந்தவர்கள் தான். அதே போன்று நீங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு பொருளாதார சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை ஆகியவை தடையல்ல என்பதை உணர்ந்து ஜாதி மத பேதமின்றி, தேவையில்லாத போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் நேர்மறை எண்ணங்களுடன் இலக்கை நோக்கி பயணித்தால் நிச்சயம் சாதனையாளர்களாக முடியும்.
உங்களிடம் என்ன திறமை இருக்கிறதோ அதில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு நல்ல ஓவியம் வரைதல், சிலருக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் போன்ற உங்களுடைய பள்ளிப்படிப்போடு இதுபோன்ற இதர செயல்பாடுகளில் நேர்மறை எண்ணங்களுடன் உங்கள் முன்னேற்றத்திற்காக கவனத்தை செலுத்தி முயற்சி செய்தால் எதிர்காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வெற்றியாளராக முடியும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளி தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன், தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் திருமதி. முத்துமாரி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராஜதுரை மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.