அரியலூர் : மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் (11.08.2025) சென்னையில் தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கும் நேரடி காணொளி காட்சி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
மேலும் இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதே போன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தினார்கள். அரியலூர் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி 2025 முதல் ஜூலை 2025 வரை மாவட்ட காவல்துறையினர் சார்பாக பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே 1525க்கு மேற்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை போதைப் பொருட்களுக்கு எதிரான 36 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.