திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே நமச்சிவாயம் (65). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் (09.01.2026) அன்று நமச்சிவாயத்திற்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 3,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை சீராக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் (CWC) அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள், வனிதா, பாமா பத்மினி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆளிநர்களையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ண குமார். இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, தொடர்ந்து கடுமையான தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 28 போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 29 நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்ட நிலையில், நிகழாண்டில் இதுவரை இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனி கவனத்துடன் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














