சென்னை : சென்னை ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை மூன்றாக பிரித்தபோது ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு 15 போக்குவரத்து போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டனர். ஆவடி போலீஸ் கமிஷனரகம், 626 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. இதில் முக்கியமான சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து பராமரிப்பு ஒரு சவாலாகவே இருந்து வந்தது. கூடுதலாக 6 பெண் வார்டன்கள் போக்குவரத்து போலீசாரின் பலத்தை அதிகரிக்கவும், போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் 29 புதிய போக்குவரத்து வார்டன்கள் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இணைத்துக் கொள்ளப்பட்டு சேவை புரிந்து வருகின்றனர். தற்போது புதிதாக 6 பெண் போக்குவரத்து வார்டன்கள் உள்பட மொத்தம் 44 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். 2000-வது ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாடு போக்குவரத்து போலீஸ் அமைப்பில் பெண் வார்டன்கள் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் இணைக்கப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் தற்போது பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், சாலை பயனாளர்களிடையே சாலை ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து வார்டன்கள் வார இறுதி நாட்களில் பல்வேறு சந்திப்புகளில் வழக்கமான சாலைப் பணியை செய்கிறார்கள். வழக்கமான பணிகளுக்கு மட்டுமின்றி போக்குவரத்து போலீஸ் திருவிழாக்கள், புத்தாண்டு பணிகள் மற்றும் தேர்தல் பணி போன்றவற்றின் போதும் உதவி வருகின்றனர். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், போலீஸ் இணை கமிஷனர் வளாகத்தில் இவர்களுக்கான புதிய அலுவலக அறையை திறந்து வைத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போக்குவரத்து பிரிவு போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.