திருவள்ளூர் : சென்னை கும்மிடிப்பூண்டி இரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் இரயில் நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே தண்டவாளத்தின் மீது மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் மேம்பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேம்பால பணிகள் தாமதமாக நடைபெறுவதை கண்டித்து இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் மீஞ்சூர் இரயில்வே கேட் பகுதியில் இரயில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை கும்மிடிப்பூண்டி இரயில் மார்க்கத்தில் இரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் இரயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர் கல்லூரி செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இரயில்வே அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி இரயில்வே கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து இரயில்கள் புறப்பட்டு சென்றன.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு