கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதி கட்டையன்விளையைச் சேர்ந்த சுனீர் என்பவரின் மகன் அஷ்ரத் அலி (21). மற்றும் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் மகன் அஜேஸ் (21). ஆகிய இருவர் நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் கடந்த ஆண்டு வெள்ளிச்சந்தை அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிப்பை முடித்திருந்தனர். அதற்கான சான்றிதழ்களைப் பெற நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளமோடி பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்றனர். சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது, அஜேஸ் வாகனத்தை ஓட்ட, அஷ்ரத் அலி பின்னால் அமர்ந்திருந்தார்.
பைக் வெள்ளமோடி சந்திப்பை கடந்தபோது, வெள்ளமோடி பூமி பாதுகாப்பு சங்கம் அருகே எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் பேருந்தின் முன்பகுதியில் சிக்கினர். அஜேஸ் சுமார் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஷ்ரத் அலியின் உடை பேருந்தில் சிக்கி, பேருந்தின் முன்பகுதியில் தொங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த ஆயா நாகலட்சுமி (50) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தகவலறிந்த வெள்ளிச்சந்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி பேருந்தை பறிமுதல் செய்து, டிரைவர் சாந்தபுரத்தைச் சேர்ந்த டேவிட் ஜெயசந்திரன் (56). என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான அஷ்ரத் அலி ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிப்பில் பல்கலைக்கழக கோல்டு மெடலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
















