திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த (09.10.2025) அன்று தாக்கியதாக மாணவர்கள் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணையில், மாணவர்கள் பேராசிரியரை தாக்கியது உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பேராசிரியர் கடந்த வாரம் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்வி சுற்றுலா சென்ற போது, மாணவி ஒருவரிடம், தொந்தரவு செய்ததாக மாணவர்கள் தரப்பில் மேற்படி பேராசிரியர் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. மேற்படி மாணவியை அவரது பெற்றோர் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்ததில் அம்மாணவி அது போன்று எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தரப்பிலிருந்து, பேராசிரியர் மீது புகார் ஏதும் அளிக்காத சூழலில், காவல்துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக SDPI மற்றும் SFI போன்ற அமைப்புகள் காவல்துறைக்கு எதிராக கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது தவறான செயலாகும். இது போன்ற அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்திகளை பரப்பி வருவது சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்