மதுரை: மதுரை,உசிலம்பட்டி அருகே தந்தை சொத்தில் பங்கு தர மறுத்து வரும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறையைக்கண்டித்து, பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த அய்யாத்துரை – வனப்பேச்சி தம்பதிக்கு சிவசக்தி என்ற பெண் குழந்தையும், முத்துப்பாண்டி, வரதராஜன் என்ற இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
குழந்தைகள் மூவரும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வரும் சூழலில், தந்தை பெயரில் உள்ள 11 ஏக்கர் ஒன்றரை செண்ட் இடத்தில் தனக்கு பங்கு தர தம்பிகள் இருவரும் மறுப்பதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய பங்கை மீட்டுத்தர கோரி சிவசக்தி,
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதங்களில் புகார் மனு அளித்தாக கூறப்படுகிறது.
தனது தம்பிகளில் ஒருவரான வரதராஜன், காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருவதால், தனது மனு மீது தற்போது வரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என, குற்றம் சாட்டி, உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்த மண்டபம் முன்பு சிவசக்தி தனது குடும்பத்தினருடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், சிவசக்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















