மதுரை : மதுரை சிம்மக்கல்லில், உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் இராஜாராம் மோகன்ராய் அவர்களின் 250-வது பிறந்தநாள் விழாவையொட்டி ”பெண்கள் மேம்பாடு” தொடர்பாக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இராஜாராம் மோகன்ராய் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறுதல், என்ற கொடுமையான நடைமுறையை முற்றிலும் ஒழிக்க பாடுபட்டார். அந்த வகையில், இராஜாராம் மோகன்ராய் அவர்களின் 250-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு , இந்திய அளவில் அனைத்துப் பகுதிகளிலும் ”பெண்கள் மேம்பாடு” தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இப்பேரணியில், கேப்ரான் ஹால் மேல்நிலைப்பள்ளி வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மங்கையர்கரசி மகளிர் மேல்நிலைப்பள்ளி கஸ்தூரிபாய் காந்தி மேல்நிலைப்பள்ளி அவ்வை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இப்பேரணியானது, மாவட்ட மைய நூலக வளாகத்தில் தொடங்கி குட்செட் தெரு விழியாக கேப்ரான் ஹால் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பெண்கள் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி