தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக (13.10.2025) அன்று குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 போன்ற எண்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குறிப்பாக மாணவிகள் அனைவரும் தங்களின் அலைபேசியில் காவல் உதவி என்ற செயலியை (Kaaval Uthavi App) பதிவிறக்கம் செய்வது மூலம் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திற்கு காவல் உதவி வந்து சேரும், இந்த செயலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயங்காமல் பயன்படுத்தலாம், இது அனைவரது அலைபேசியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செயலி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் உதவி செயலி குறித்து குறும்படம் திரையிட்டும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குற்றாலம் காவல் ஆய்வாளர் முத்து கணேஷ், கல்லூரி முதல்வர் Dr. S.அமிர்த வள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்