மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது – தனி ஆளாக போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்,
கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள், உசிலம்பட்டி வழியாக திருநெல்வேலி வரை செல்லும் பேருந்துகள் வாகனங்கள் என ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்த பெண் காவலர் விஜயலட்சுமி, போராட்டம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் ஆத்தா எந்திரி, தண்ணீர் வந்துவிடும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என போராடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பெண்களை ஒதுங்க வைத்து போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சூழலில், பெண் காவலர் தனி ஆளாக போராட்டம் நடத்தியவர்களுடன் சாதூர்யமாக பேசி போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி