திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பெண்கள் அருமந்தை – ஞாயிறு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டு சரளை கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வாகனங்கள் கற்களில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்களில் காயமடைந்து வருவதாக பெண்கள் குற்றம் சாட்டினர். மாணவர்கள், மருந்துவமனை செல்லும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் மோசமான சாலையால் தினந்தோறும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை அமைக்கும் பணிகளை நாளையே தொடங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு