திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ண குமாரை காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே, நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா ஆஸ்டியன்பட்டி அருகிலுள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பக்கத்தில் ஆண் சடலம் ஒன்று நேற்று கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார் ( 30) என, தெரிந்தது. அவர் ஏற்கனவே ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்கு நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக் கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் கொலையாளிகள் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன் (29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன் (29) என தெரிந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி