திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை கடந்த 12ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் நோட்டமிட்டு சென்றதாக சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இயங்கி வரும் தனியார் உணவு நிறுவனத்தின் உணவு வழங்கும் ஊழியர்கள் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர் என தெரியவந்தது. கடந்த 12-ஆம் தேதி இரவு உணவு நிறுவனத்திடம் பெருமாள்புரம், செயின்ட் ஜோசப் தெருவில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் உணவு கேட்டுள்ளார். அதன் பேரில், சிவக்குமாரும், அவருடைய நண்பரும் முதலில் செயின்ட் மேரீஸ் தெருவுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு முகவரி சரியாக தெரியாத காரணத்தினால் அருகிலுள்ள நீச்சல்குளம் தெருவுக்குச் சென்று, அந்த முகவரியை உறுதி செய்வதற்காக அந்தத் தெருவின் பெயர்ப் பலகையை பார்வையிட்டு வாடிக்கையாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். முகவரியை உறுதி செய்த பின்னர் வாடிக்கையாளருக்கு உணவை வழங்கிவிட்டு சென்றது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்ம நபர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என மாநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















