திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் ஜோதி கிளி, இசக்கிராணி, இவர்களது மகன் தருவையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் இந்த மாணவனுக்கும், சக மாணவனுக்கும் இடையே சிறு பிரச்சனை ஏற்பட்டு அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சக மாணவர் தன்னை தாக்கியதாக ஜோதிகிளியின் மகன் தனது பெற்றோரிடம் கூறவே, அதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஜோதி கிளி நேராக தனது மகனை தாக்கிய சக மாணவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து ஜோதி கிளியின் மனைவி இசக்கிராணியும் சிறுவனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்நிலையில் சிறுவன் தாக்கப்படும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ளவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் காயம் அடைந்த மாணவனின் தாயாரிடம் புகார் மனு பெற்று சிறுவனை தாக்கிய ஜோதி கிளி மற்றும் அவரது மனைவி இசக்கிராணி ஆகியோர் மீது சிறுவனையும், அவனது தாயாரையும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததற்கும் சிறுவனை தாக்கியதற்கும் இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323, 506 (2), பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராணியை கைது செய்தனர். தலைமுறைவான ஜோதி கிளியை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்