திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் பஸ் ஏறுவதற்கு முயன்ற போது அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் திருடிவிட்டார்.அப்போது படிக்கட்டில் நின்றிருந்த ஒருவர் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார். உடனே இவரும் இறங்கி அவரைப் பிடித்து எனது செல்போனை கொடு என கேட்டபோது, அவர் நான் எடுக்கவில்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்-பக்கம் உள்ளவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தினர். சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது ” குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.