திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று கலையரங்கம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிலர் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் கலையரங்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சந்தேகம் அளிக்கும் வகையில் 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த சந்தோஷ்(32), ராஜபாண்டி(26), பெங்களூரை சேர்ந்த கிளிப்ட் அகஸ்டின்(27) உள்ளிட்ட கைது செய்து சிறையில் அடைத்தனர்.