தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், கணக்குகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. தீபு அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21). என்பவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான கணக்குகளை உருவாக்கி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளி அனுஜ் குமாரை கடந்த (09.02.2026) அன்று உத்தரப்பிரதேச மாநிலம் சென்று கைது செய்து நேற்று (12.02.2026) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட இருந்த குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
















