தூத்துக்குடி: தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த தொம்மை அந்தோணி என்பவரது மனைவி கெபிமலர் (53). என்பவரிடம், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பூலித்தேவன்நகரை சேர்ந்த வள்ளிக்கண்ணு மகன் பழனிராஜா (29). என்பவர் தான் கலாம் HR solution என்ற நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் உங்கள் மகன்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி மேற்படி கெபிமலர் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 6 லட்சம் பணத்தை வங்கி கணக்கு மற்றும் ரொக்கமாக மேற்படி பழனிராஜாவிற்கு கொடுத்துள்ளார். ஆனால் பழனிராஜா வேலை வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளார். இது குறித்து கெபிமலர், பழனி ராஜாவிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர் 6 லட்சம் பணத்திற்கு இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். இந்த காசோலைகளைப் பெற்றுக் கொண்ட கெபிமலர் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திருப்பப்பட்டுவிட்டது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கெபிமலர் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமிபிரபா தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. சண்முகசுந்தரம், திரு. மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி குற்றவாளி பழனிராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.