அரியலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கனையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜசேகர் ஆவார். இவர் தற்போது அரியலூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரண்டு வருடமாக கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கூகுளில் வந்த லிங்கை தொட்டு ஒரு டிரேடிங் குழுவில் இணைந்துள்ளார். இக்குழுவிலுள்ள அட்மின்கள் 500% லாபம் பெறலாம் எனக் கூறி அறிவுரைகள் வழங்கியதையடுத்து, அவர்கள் கூறியபடி தனது மொபைலில் PREMJIX என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்துள்ளார்.
முதலில் மூன்று லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் தொகையை தனது வங்கிக் கணக்கின் மூலமாக எடுத்துள்ளார். மேலும் அதிக லாபம் பெறலாம் என பல்வேறு தவணைகளாக அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் 46 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். இதனால் அந்த செயலிலியில் வாலட்டில் 25கோடி பணம் சேர்ந்துள்ளது. இந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது இரண்டு சதவீதம் சேவை கட்டணமாக 50 லட்சத்தை கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜசேகர் கொடுத்த ஆன்லைன் (1930-இணைய குற்ற உதவி எண் மூலமாக) புகாரின் அடிப்படையில், இணைய காவல் குற்ற எண் (16/25). வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணையில், குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள புதுப்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் வேலு (31/25). என்பவரது என்று தெரியவந்தது.
இதனையடுத்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் (பொறுப்பு-இணைய குற்றப்பிரிவு) அவர்களின் வழிகாட்டுதலின் படியும், இணையக் குற்ற காவல் ஆய்வாளர் திருமதி.இசைவாணி அவர்கள் குற்றவாளி வேலுவை கைது செய்து, குற்றவாளியிடமிருந்து ரூபாய் 5,00,000/-, செல்போன் -02, வங்கி கணக்கு புத்தகம்-01, காசோலை புத்தகம்-06, ஏடிஎம் கார்டுகள்-05 மற்றும் ஆபீஸ் சீல்-01 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் விசாரணை செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.