திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. காமராஜர் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் வரும் பெட்ரோல், டீசல், கெரோசின், ஒயிட் பெட்ரோல் ஆகியவை பைப்மூலம் இறக்குமதி செய்யப்பட்டு இங்கிருந்து கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு லாரிகள் மூலமும் ரயில் மூலமும் தினந்தோறும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் சென்னை, திருச்சி, திருப்பதி, தஞ்சாவூர் ஆகிய விமான நிலையங்களுக்கும் ஒயிட் பெட்ரோல் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் ஹவுஸ்கீப்பிங், எலக்ட்ரீசியன், மெக்கானிக்கல், பவர் லோடிங், அன்லோடிங் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்திட வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை முறையாக வழங்கிட வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினுடன் இணைந்து தொழிலாளர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோத வேலை நீக்கம், ESI திட்ட பலன்கள் வழங்கப்படுவதில்லை, விடுப்பு வசதி வழங்கப்படுவதில்லை, பண்டிகை முன்பணம் மற்றும் கல்வி முன்பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து எண்ணெய் நிறுவன வாயிலை முற்றுகையிட முயன்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக இப்பகுதியில் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு