திருச்சி: திருச்சியில் ஊரடங்கின்போது பணியாற்றும் போலீஸார் பெரும் மனச்சோர்வுக்கு தள்ளப்படுவதாகவும், தினமும் 2 ஷிப்டு என்ற முறையில் பணியாற்றுவதால் வீட்டிற்கு சென்றும் நிம்மதியில்லாத நிலையிலேயே பணியாற்றுவதாக புலம்பித்தீர்க்கின்றனர்.
திருச்சி மாநகரில் வழக்கமாக 8 சோதனைச்சாவடிகள் உள்ளன. தற்போது அது 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகரில் முக்கிய சாலைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை உள்ளிட்ட பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக லோகநாதன் இருந்தபோது ஏ-பி-சி என்ற 3 ஷிப்டு முறையில் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர். இதனால், ஒரு ஷிப்டுக்கு 8 மணி நேரம் பணி முடித்து காவலர்கள் ஓய்வுக்கு திரும்புவது வழக்கம்.
அத்துடன் மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார், குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். முந்தைய கொரோனா ஊரடங்கு வேளையிலும் இதே நிலைதான் நீடித்து வந்தது.
இந்த நிலையில் தற்போது மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின்னர் காவலர்களுக்கான பணியினை ஏ-பி என்ற வகையில் மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒவ்வொரு காவலர்களும் 12 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது.
இந்த முறையில் பணி நேரம் அதிமாக உள்ளதால் பணிச்சுமையுடன், மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையில் பணியாற்றுவோர் தெரிவிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவருமே காவல்துறையின் பணியில் இருக்கும் சூழலில் பலரும் தங்களது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், குடும்ப பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்த முடியாததால் பல்வேறு விபரீத முடிவுகளை எடுக்கும் சூழலுக்கு தாங்கள் தள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் மாநகர காவலர்கள்.
அதேநேரம் பொதுமக்களும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தங்களை தரக்குறைவான பார்வையில் பார்ப்பதாகவும், கூட்டத்தை கூட்டாதீர் என்றாலும் எங்கும் காலை 6 முதல் 10 மணிக்குள் பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூடுவதால் காவலர்களுக்கு கொரோனா அச்சம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘திருச்சி மாநகரப்பகுதிகளில் அதிகமான இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து போலீசார் தனியாக சோதனை மையங்களை அமைத்துள்ளதால், போலீசார் பற்றாக்குறை உள்ளது.
எனவேதான் ஏ-பி முறையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. போலீசார் கூடுதல் நேரம் பணியாற்றினாலும் அதற்கேற்ற வகையில் ஓய்வும் வழங்கப்படுகிறது. இந்த சுழற்சிமுறை பணி போலீசாருக்கு மட்டுமல்ல. அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் பொருந்தும்’ என்றனர்.