தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் (Facebook) கடந்த 13.09.2022 அன்று Monzo என்ற பெயரில் இணையதள வழி கடன் செயலி (online Loan App) விளம்பரம் இருந்ததாகவும், அதை பார்த்த அவருக்கு கடன் தேவைப்பட்டதால் அதில் இருந்த இணைப்பை தொட்டு (Linkஐ Click செய்து) அந்த இணைய வழி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் சௌந்தரராஜன் தனது பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை பதிவு செய்து ரூபாய் 3 லட்சத்திற்கு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பின்னர் +855715094841 என்ற எண்ணிலிருந்து சௌந்தரராஜனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் அவரிடம் கடன் ஏற்பாடு செய்வதாக சொல்லி loan Processing Charge, Account clearing charge உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி சௌந்தரராஜனை ஏமாற்றி, அவரிடமிருந்து ரூபாய் 1,35,000/- பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சௌந்தரராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு, சௌந்தராஜன் IMPS முறையில் (Transaction Id : 225619475587, 225712568711) பணம் அனுப்பிய ரூபாய் 45,000/-ம் மற்றும் ரூபாய் 30,000/-ம் ஆகியவை பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட குற்றவாளியின் வங்கியான தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உள்ள குற்றவாளியின் கணக்கு விபரங்கள் மின்னஞ்சல் மூலம் 10.10.2022 அன்று கேட்கப்பட்டு பெறப்பட்டது. மேற்படி வங்கியின் மேலாளரை விசாரணை செய்து அவர் கொடுத்த குற்றவாளியின் மற்றொரு செல்போன் எண்ணான +918675445414 என்ற எண் மூலம் கிடைத்த குற்றவாளியின் முகவரியையும் வங்கி கணக்கில் உள்ள முகவரியை வைத்தும் குற்றவாளி தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் பாலசுப்பிரமணியன் 27 என்பவரை அவருடைய செல்போன் Location வைத்து கடந்த 13.10.2022 அன்று தூத்துக்குடியில் வைத்து கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு பணத்திற்காக போலியான நிறுவனம் மற்றும் போலியான வங்கி கணக்குகள் உருவாக்கி குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துராஜ் 32 என்பவரை தென்காசியில் வைத்தும் மேற்படி தனிப்படை போலீசார் நேற்று (14.10.2022) கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் இவர்கள் பயன்படுத்திய 3 வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் இவர்கள் இந்தியா முழுவதும் பலரிடம் ஏமாற்றி ரூபாய் 4 கோடிக்கு மேல் மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பான குற்ற செயலுக்கு உடந்தையாக இந்தியா முழுவதும் பல எதிரிகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்படி சைபர் குற்றப் பிரிவு போலீசார் குற்றவாளிகள் 2 பேரையும் நேற்று (14.10.2022) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி மாவட்ட சிறையில அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி இணைவழி கடன் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.