தூத்துக்குடி: தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த ஜெபதுரை மகன் மாரிக்குமார் (33). என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையின் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் (18.05.2024) சரக்கு வாகனத்தில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீங்கான் ஆபீஸ் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மேற்படி மாரிக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா , இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெனோரஸ் மகன் காத்தான் என்ற கார்லின் (24). தனது கூட்டாளியுடன் சேர்ந்து மேற்படி மாரிக்குமாரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த ரொக்க பணம் ரூபாய் 9,400/- ஐ பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணிநேரத்தில் மேற்படி குற்றவாளி கார்லினை கைது செய்து, அவரிடமிருந்த பணம் 3160/-யும் பறிமுதல் செய்தனர். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்படி பணப்பறிப்பில் ஈடுபட்டதும், அதன் பிறகு அவர்கள் யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சாலையிலிருந்த வேகத்தடையில் தடுமாறி சறுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.