மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (19.07.2024)ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை Online Trading-ல் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என போஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் ரூ.92,16,710/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.21,08,703/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி குற்றவாளிகளுக்கு Online Trading-ல் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, Bandhan வங்கி கணக்கை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் நித்தீஷ்குமார், லட்சுமணன் மகன் சந்திரசேகரன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் சவுரியார்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் என்பதும் தெரியவந்தது.
மேற்படி குற்றவாளிகள் Bandhan வங்கியில் நடப்பு வங்கி கணக்கு ஒன்றினை நித்தீஷ்குமார் மூலமாக தொடங்கி சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைக்கு லட்சக்கணக்கில் பணம் கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது. மேற்படி குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த குற்றவாளிகள் ஆந்திரா, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்திரபிரதேசம், மேற்குவங்காளம், நாகலாந்து, ஒடிசா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி சைபர் குற்றவாளிகளின் மூலம் மேற்கண்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி ஆன்லைன் பணமோசடி செய்து ரூ.3 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்