தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நிலோபர் (25). என்பவருக்கு அறிமுகமான ஒருவர் கப்பலில் வேலை வாங்கி கொடுக்க தனக்கு தெரிந்த நபர் இருப்பதாக கூறி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வினோத் (28). என்பவரை நிலோபருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து வினோத் துபாய்நாட்டு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக நிலோபரிடம் ஆசை வார்த்தை கூறியதன் பேரில் வினோத்தின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 4,85,000/- பணத்தை நிலோபர் அனுப்பி உள்ளார். இதற்கிடையில் வினோத் தூத்துக்குடியைச் சேர்ந்த மேலும் 2 பேரிடம் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 1,75,000/- மற்றும் 2,50,000/- என மொத்தம் ரூபாய் 9,10,000/- பணத்தை பெற்றுக்கொண்டு மேற்படி நிலோபர் உட்பட 3 பேரையும் துபாய் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி மும்பைக்கு அழைத்துச் சென்று ஒரு மாதம் வரை மும்பையில் காத்திருக்க வைத்து கப்பலில் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த நிலோபர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜு அவர்கள் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி பிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மோகன் ஜோதி மற்றும் தலைமை காவலர் திரு. வேல்ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி மோசடி குற்றவாளி வினோத்தை (23.12.2024) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் வினோத்துடன் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா எனவும், இது போன்று பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வினோத் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா எனவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.