திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த இசக்கி முத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஜேசிபி, ஹிட்டாச்சி போன்ற வாகனங்களை பெற்று, ஒப்பந்த தொழில் செய்து வந்த நிலையில் அவர் சமீபத்தில் இறந்துவிட்டதால் அவரிடம் வாகனங்களை ஒப்படைத்த நபர்கள், தங்களது வாகனங்களை மீட்டுத்தர கோரி பணகுடி காவல் நிலையத்தில் மனு அளித்ததன் பேரில், மனு ரசீது வழங்கப்பட்டதுடன், விசாரணை செய்யப்பட்டதில், இருதரப்பினர் இடையே, பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற தனிப்பட்ட வணிகப் பரிவர்த்தனை மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனை என தெரிய வந்ததால் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு, மனு விசாரணை நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த வீர நாகராஜேஷ் என்பவர், இறந்த இசக்கி முத்துவிடம் ஒப்படைத்த வாகனத்தை மீட்க (26.11.2025) அன்று பணகுடி பேருந்து நிலையம் அருகே, தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி பணகுடி காவல் நிலையத்தில் மனு அளித்தார். வள்ளியூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரால் மேற்படி மனு பரிசீலிக்கப்பட்டு அனுமதி மறுத்து, கடந்த (24.11.2025) அன்று செயல்முறை ஆணை சார்பு செய்யப்பட்டது. அனுமதி வழங்க எழுத்துப்பூர்வமாக மறுக்கப்பட்ட நிலையில், (26.11.2025) அன்று பணகுடி பேருந்து நிலையம் அருகே வீர நாகராஜேஷ், கன்னியாகுமரி மாவட்ட பாஜக மத்திய அரசு நலத்திட்ட பணிப்பிரிவு மாவட்ட தலைவர் ரஜினிகாந்த், ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த ராபர்ட், காட்டுப்புதூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகியோர் உட்பட சுமார் 25 பேர் சட்டவிரோதமாக ஒன்றுகூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒன்று கூடி பொது மக்களுக்கு தொல்லை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் மீது, பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















