திருவள்ளூர்: நேற்று முன்தினம் வைரவன் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் தட்சிணாமூர்த்தி, மணிபாலன், செல்வம், மோகன் மற்றும் அரங்கம் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் அப்பு ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரண்டு நாட்களாக மீன்பிடித்து விட்டு மூன்றாவது நாளான இன்று கரையை நோக்கி வரும்போது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து உள்ளது. இதில் படகில் இருந்த செல்வம் மோகன் ஆகியோர் மாயமான நிலையில் தட்சிணாமூர்த்தி, மணிபாலன் அப்பு ஆகியோர் தப்பித்து கரை சேர்ந்தனர். தகவல் அறிந்து கிராம மக்கள் படகுகள் மூலம் அங்கு சென்று கவிழ்ந்த படகினையும் மீன்பிடி உபகரணங்களையும் கரை சேர்த்தனர். மேலும் காணாமல் போன இருவரையும் கடலில் தேடி வருகின்றனர். இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு படகுகள் மூலம் விரைந்து சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு