திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களில் ஒரு தரப்பினர் பழவேற்காடு ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வைரவன் குப்பத்தை சேர்ந்த இளங்கோ என்ற மீனவர் மேலும் இருவருடன் தமது படகில் கடலுக்கு மீன் பிடிக்க இன்று அதிகாலை புறப்பட்டு சென்றார். பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக அலையில் சிக்கிய படகு கவிழ்ந்தது. மேலும் அங்கு முகத்துவாரப் பணிகளுக்காக கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது மோதியதில் படகு இரண்டாக உடைந்தது. படகிலிருந்த மீன்பிடி வலைகளும் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்கச் சென்ற இளங்கோ, ஜானகிராமன், சுந்தர் ஆகிய மூன்று மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து கற்களில் மோதி இரண்டாக உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு