நெல்லை: அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கருங்குளத்தை சார்ந்தவர் முருகன் மனைவி சுதா(40) இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மூன்று வருடமாக அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகே கொய்யாப்பழ வியாபாரம் செய்து வருகிறார்.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் வாடி வந்தார்.
இவர் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளள நிலையில் மீண்டும் அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகில் கொய்யாப் பழ வியாபாரம் செய்து வந்தார்.
இவரிடம் பழம் வாங்க வந்த யாரோ ஒரு நபர் பழம் வாங்கி விட்டு செல்லும்போது தங்க கொலுசை தவற விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து இவர் பார்க்கும்போது கீழே கிடந்த தங்க கொலுசு எடுத்துக்கொண்டு அஞ்சுகிராமம் காவல் நிலையம் சென்றார்.
அங்கு உதவி ஆய்வாளர் ஜெஸ்ஸி மேனகா விடம் நகையை கொடுத்து நடந்த விவரங்களை கூறினார். அப்போது ஏழ்மையிலும் நேர்மையாக நடந்து கொண்ட இந்தப் பெண்ணின் சிறந்த குணத்தைப் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து நகையை தவறவிட்ட பெண் சுதாவிடம் வந்து விசாரித்திருக்கிறார். அப்போது சுதா நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்ததை கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலையம் வந்து விவரங்களை கூறி நகையை பெற்றுக்கொண்டார். ஏழ்மையிலும் நேர்மை கடைபிடித்த அப்பெண்ணை போலீசார், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.