விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம் இணைந்து, தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தியது. சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி தலைமையில், பேராசிரியை நந்தினி வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தொழில் நெறி வழிகாட்டு கையேட்டினை ஆட்சியர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் அனைவருக்கும் அவர்களது திறமைகளுக்கேற்ப பணிகள் காத்திருக்கின்றன. தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, வேலை வாய்ப்பு, அரசுப் பணிகள், புதிய தொழில்களை சுயமாக துவங்குவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.
அதற்காகவே மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஏராளமாக இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்தும், தொழில்கள் நடத்தும் வழிமுறைகள் குறித்தும் இந்த கருத்தரங்கமும், கண்காட்சியும் உங்களுக்கு மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று பேசினார். கருத்தரங்கில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் குறித்து விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி விரிவாக பேசினார். நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு மண்டல இயக்குநர் மகாலட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயிற்றுவிப்பு உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) ஞானபிரபா, மாவட்ட வேலை வாய்ப்பு (தொ.வ) பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கல்பனா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி