மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே டி.மாணிக்கம்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் என்பவர், தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக மேலூர் செக்கடிபகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவருக்கு பணம் எடுத்து தருவது போல நடித்த மர்ம நபர் ஏடிஎம் அட்டையை மாற்றி கொடுத்துவிட்டு லாவகமாக தப்பினர்.
இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 45 ஆயிரம் எடுத்துள்ளதாக அவரது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேலூர் காவல்துறையினர், உடனடியாக விசாரணை நடத்தியதில் அய்யம்மாள் வங்கிக் கணக்கில் 45 ஆயிரம் ரூபாய் இருந்ததும் அவற்றை மதுரையிலுள்ள ஏடிஎம் மையத்திலும் மற்றும் நகைகடை ஒன்றிலும் பரிவர்த்தனை மூலம் மர்மநபர் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சியின் அடிப்படையில் அந்த மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.