சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இளம்பெண் மற்றும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். இதில் 1½ கிலோ கஞ்சா மற்றும் 75 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது. அவர்கள் அப்பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்த ராஜூ (27), சேத்துப்பட்டு 2-வது தெரு எம்.எஸ்.நகரை சேர்ந்த அஜய்குமார் (27), ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாந்தி பிரியா (22) என்பது தெரிய வந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா, வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ராஜூ மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளம்பெண் சாந்தி பிரியாவின் கணவர் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.