திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைச் சிறையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நீதிபதி மீனாட்சி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தீயணைப்பு துறை, மருத்துவத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அரசின் 22 துறைகள் கொண்ட அதிகாரிகளுடன் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். பொன்னேரி கிளைச் சிறையில் கைதிகளுக்கு முறையான குடிநீர் கழிப்பறை கொண்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அப்போது ஆய்வு செய்தனர்.
கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நேர்காணல் அறையையும் நேரில் சென்று அப்போது ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் ஒப்படைப்பு பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் எடை உள்ளிட்டவற்றை அப்போது உறுதி செய்தனர். சிறை கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தினை பார்வையிட்டு உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தனர். மேலும் சிறைவாசிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் சிறைவாசிகளிடம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் கேட்டறிந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு