திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை இன்று (30.12.22) ம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள மானூர் காவல் நிலையத்தின் கட்டிடத்தை, மானூர் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து உடல் நலக்குறைவால் மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வதிரு. செல்வம் என்பவரின் மனைவி திருமதி. மல்லிகா அவர்கள் மூலம் ரிப்பன் வெட்டி புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள், குத்து விளக்கேற்றி வைத்து காவல் நிலைய சுற்றுபுறங்களை பார்வையிட்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மானூர் காவல் நிலையம், மாவட்டத்தில் முதன் முறையாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு என்று தனி கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிரிகளை அடையாளம் காணும் விதமாக சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுத வைப்பு அறை, கோப்பு அறை, கணினி அறை மற்றும் ஆண் காவலர்கள், பெண் காவலர்களுக்கென்று தனி ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்தராஜ் அவர்கள், மானூர் காவல் ஆய்வாளர் திரு.சபாபதி, அவர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், மானூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன், மானூர் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.