அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் (09.10.2024) அன்று தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் (10.10.2024) வீட்டின் கதவு உடைந்து திறந்து இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ராமலிங்கம் வீடு திரும்பி பார்த்தபோது அவரின் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு 36 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள், திருடு போனது. இதுகுறித்து ராமலிங்கம் அவர்கள் (10.10.2024) அன்று மீன்சுருட்டி காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகார் அடிப்படையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகரன் அவர்கள் வழக்கு பதிவு செய்தார்கள்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் உத்தரவின்படி, ஜெயங்கொண்ட உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சக்கரவர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் திரு.சீனிபாபு அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வந்தனர். புலன் விசாரணையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணவாளன் (25/25). மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் (19/25).ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிபாபு அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் 23.09.2025 இன்று எதிரிகளை கைது செய்து, எதிரிகளிடமிருந்து திருடு போன 20 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் எதிரிகள் உபயோகித்த இருசக்கர வாகனம் முதலியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். இதில் எதிரி மணவாளன் மீது நாகப்பட்டினம் கடலூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 28 வழக்குகளும், எதிரி ஆகாஷ் மீது நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 வழக்குகளும் உள்ளன.
அதனைத் தொடர்ந்து 23.09.2025 இன்று எதிரிகள் இருவரையும் மீன்சுருட்டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழக்கு குறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.