திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (70), என்பவரும் மரியலீலா (67), என்பவரும் கணவன் மனைவி ஆவர். பாக்கியராஜ்யின் பெயரில் உள்ள வீட்டையும் சுற்றியுள்ள இடத்தையும் மரிய லீலா தனக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பாக்கியராஜ் எழுதி தராததால் வீட்டில் அவர் படுத்து இருந்தபோது மரிய லீலா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார். இதுகுறித்து வள்ளியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மரிய லீலாவை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. குமரகுரு அவர்கள் குற்றவாளி மரிய லீலாவிற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த வள்ளியூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.