கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரியை அடுத்த இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (37), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி திரிவேணி (27), சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி திரிவேணியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த (11.6.2018) அன்று உடலில் தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட திரிவேணி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
திரிவேணி இறக்கும் முன்புகாவல்துறையினரிடம் தன்னை அடித்து, தன் மீது மண்எண்ணெயை ஊற்றி கணவர் சுரேஷ் தீ வைத்ததாக மரண வாக்குமூலம் அளித்தார். அதன்படி அப்போதைய மத்திகிரி காவல் ஆய்வாளர் திரு.சரவணன், சுரேசை கைது செய்தார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுரேசிற்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக, 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், என்றும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்