திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது உரிமைகளுக்காக அண்மையில் சிஐடியு தொழிற்சங்கத்தின் கிளையை தங்களது தொழிற்சாலையில் தொடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் தொழிற்சங்க கிளையை திறந்ததை கண்டித்து நிர்வாகம் தரப்பில் நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் பல்வேறு வகைகளில் தொழிற்சங்கத்தை தொடங்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கடி தந்து வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக தொழிற்சாலை அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 48வது நாளான இன்று குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் தொழிற்சாலை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நலவிரோத போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி சி ஐ டி யு தொழிற்சங்கத்தில் உடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது எனவும், ஆனால் தொழிற்சங்கம் அமைத்ததாக சஸ்பெண்ட் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என சாடினர். தொழிலாளர் நலத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டு கொண்டனர். இதனிடையே பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.