திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் பிரபல தனியார் வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு துப்புரவு, தோட்ட பணி, ஓட்டுநர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என குற்றம் சாட்டினர். துப்புரவு, தோட்ட பணிகளில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களை பொறுப்பு அதிகாரி ஒருவர் தரக்குறைவாக நடத்துவதாகவும், இதனால் பெண் தொழிலாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் 8மணி நேரத்தை தாண்டியும் வேலை வாங்கப்படுவதாகவும், பணி நேரத்தை வரன்முறைபடுத்திட வேண்டும் எனவும், மதிய உணவு இடைவேளை முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சாலை உயர் அதிகாரிகள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்கள் திடீர் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு