கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. நேற்று மாலை காரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அவர் தப்பி ஓட முயலவே, விடாமல் துரத்திய பொதுமக்கள் மாங்கோடு பகுதியில் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அருமனை காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் அருகேயுள்ள ராண்டினியைச் சேர்ந்த ஜெகன் அச்சுதன் (40). என்பது உறுதி செய்யப்பட்டது. இவரை விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவர் மீது பூதப்பாண்டி, குலசேகரம், திருவட்டாறு, அருமனை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 64 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரோடு பகுதியில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து சுமார் 200 கிலோ ரப்பர் ஷீட்டுகள், பணம் மற்றும் இரண்டு பைக்குகளை இவர் திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. திருடிய பொருட்களை விற்று கிடைக்கும் பணத்தில் மிகவும் சொகுசாக வாழ்ந்து வந்த இவர், அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்த ஜெகன், மீண்டும் தனது திருட்டு வேலையைத் தொடர்ந்துள்ளார். இவரிடமிருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குழித்துறை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய கைது நடவடிக்கையினால் அருமனை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
















