திருவள்ளூர் : இந்திய தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினமே அமலுக்கு வந்ததால் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் செல்லும் வாகனங்களில் தொடர்ந்து பணம், பரிசுப்பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது அ.தி.மு.க இரட்டை இலை சின்னத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை கொண்ட வாகனம் ஒன்று வந்த நிலையில் அதனை உடனடியாக அகற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாத வாகனம் என்பதால் தி.மு.க நிர்வாகி ஒருவரது காரில் இருந்த தி.மு.க கொடியினையும் அகற்றிட அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து காரின் கொடி கம்பத்தில் கவர் கொண்டு மூடப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தொடங்கியதால் தேர்தல் பரபரப்பு தொடங்கியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு