திருச்சி: (01.01.2026) முதல் (31.01.2026) வரை அனுசரிக்கப்படும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி முசிறி போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் இன்று முசிறி புதிய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றுவதின் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் பயன்பாடு, வேகக் கட்டுப்பாடு, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகன ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
















