மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் தாய் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது காற்றினால் தென்னைமரம் முறிந்து விழுந்ததில் (2).வயது பெண் குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். தனியார் பள்ளியில் ஒட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி ஹேமலதா மற்றும் தனது இரண்டு வயது பெண் குழந்தை ஜஸ்டிகாவுடன் இரு சக்கர வாகனத்தில் கச்சைக்கட்டியிலிருந்து ஆண்டிபட்டி பங்களா செல்லும் சாலையில் வாடிப்பட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது திடீரென வீசிய பலத்த காற்றினால் சாலை ஓரமாக இருந்த தோட்டம் ஒன்றிலிருந்து தென்னை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்துள்ளது. சத்தத்தினால் பதட்டமான ஜெகன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, முறிந்த தென்னை மரம் வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்த குழந்தை ஜஸ்டிகா மீது விழுந்தது.
இதனால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, உடனடியாக அருகில் இருந்த கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து , குழந்தையின் உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அங்கும் மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தரப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில், பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி