தென்காசி : கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் என்பவரின் மகனான கருப்பையா என்பவருக்கும் அவரின் உடன் பிறந்த அண்ணனான வெள்ளத்துரை என்பவருக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த (21.09.2016) அன்று கருப்பையா குடித்துவிட்டு அவர்களது கிணற்றில் உள்ள மோட்டார் ஸ்டாட்டரை உடைத்ததால் கோபம் அடைந்த வெள்ளத்துரை கருப்பையாவை கம்பால் அடித்து கொலை செய்து பின்னர் அவரது உடலை சாக்கில் கட்டி இருசக்கர வாகனம் மூலமாக கிருஷ்ணாபுரம் பெரியகுளம் பாலம் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் இறந்த நபர் மற்றும் குற்றவாளி யார் என்று தெரியாததால் வழக்கானது கடந்த 07 வருடங்களாக நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் வழக்கின் இறந்த நபர் மற்றும் குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் B.E., M.B.A., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெள்ளத்துரை என்பவர் தனது தம்பியை கொலை செய்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் வழக்கின் குற்றவாளியான கரடி குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராயப்பன் என்பவரின் மகன் வெள்ளத்துரை(50). என்பவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.