திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூய்மை பணிகளை புறக்கணித்து பணியாளர்கள் பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 6 லட்ச ரூபாய் பணம் திருடு போனதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு தூய்மை பணியாளர்கள் இருவரை போலீசார் அழைத்துச் சென்றதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணம் திருடுபவர்கள் அல்ல எனவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்கள் எனவும் சந்தேக அடிப்படையில் அழைத்துச் செல்வதை ஏற்க முடியாது எனக்கூறி தொழிலாளர்கள் தூய்மை பணிகளை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மீஞ்சூர் பேரூராட்சியில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காவல்துறையினர் பேரூராட்சி தலைவர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு