தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்திநகர் பகுதியில் வசிக்கும் மகாலிங்கம் மனைவி முத்துலெட்சுமி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வருவதற்குள் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து பணம் ரூபாய் 1,00,000/- மற்றும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான 6 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக முத்துலெட்சுமி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ், சிவக்குமார், தலைமை காவலர் பென்சிங், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், பெண் தலைமைக் காவலர் மகாலெட்சுமி ஆகியோர் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்ட தனிவிரல் ரேகை பதிவுக்கூட பிரிவு உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி மற்றும் தலைமைக் காவலர் திருமுருகன் ஆகியோர் தலைமையிலும் தனிப்படைகள் அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் மனுதாரர் முத்துலெட்சுமி என்பவர் சம்பவ நாளன்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டை பூட்டி சாவியை காம்பவுண்டுக்குள்ளேயே வைத்து காம்பவுண்டு முன்வாசலை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பி வருவதற்கு ஒரு மணி நேரத்திற்குள்ளாக யாரோ ஒருவர் வீட்டிற்குள் ஏறி விழுந்து, உள்ளே இருந்த வீட்டுச் சாவியை எடுத்து, வீட்டை திறந்து பூட்டப்படாமல் இருந்த பீரோவை திறந்து, அதில் பூட்டியிருந்த உள் அறையை தேங்காய் கீறியை பயன்படுத்தி உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.
தனிவிரல் ரேகை பதிவுக்கூட பிரிவினர்; அங்கிருந்த கை ரேகைகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயகணேஷ் மனைவி பேராட்சி செல்வி (27) என்பவரின் கைரேகை என்று நிரூபணமானது.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் மேற்படி பேராட்சி செல்வியிடம் விசாரணை செய்ததில் பக்கத்து வீட்டிலிருந்து மனுதாரர் முத்துலெட்சுமி வெளியே செல்வதை கவனித்து, மாடிப்படி வழியாக உள்ளே இறங்கி மேற்படி திருட்டை செய்ததது ஒப்புக்கொண்டார். உடனே பேராட்சி செல்வியை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோதிரம், கைச்செயின், கம்மல் உட்பட் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 85,000-த்தையும் பறிமுதல் செய்தனர்.
எதிரியை விரல் ரேகை பதிவுகளை ஆய்வு செய்து, எதிரியை அடையாளம் கண்டுபிடித்த தனிவிரல் ரேகை பிரிவினர் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.