தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் (07.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, நீதிமன்ற அலுவல்கள், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 48 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















