தூத்துக்குடி : தூத்துக்குடி தனியார் தாமிர ஆலை சம்மந்தமாக ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்” விசாரணை நடைபெற்று வரும் வழக்கில் பெருமதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது.
ஆகவே தற்போது தமிழகம் முழுவதும் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144 அமலில் இருப்பதால் தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்தும், தீவிர ரோந்து அலுவல் செய்தும், சமூக விரோதிகளை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு பணியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 46 காவல் ஆய்வாளர்கள், 85 உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், உள்ளுர் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மொத்தம் 1100 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று (18.08.2020) அதிகாலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு எங்கெங்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது, அவர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.